சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் இடங்களுக்கு 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட திட்ட அலுவலர் (பொறுப்பு) சி.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்களில் ஏற்பட்டுள்ள அங்கன்வாடி மைய பணியாளர் காலி இடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். திருமணம் ஆகியிருப்பதுடன் ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றிருப்பது அவசியம். மேற்கண்ட தகுதியுடைய பெண்கள் ஒரு வெள்ளைத்தாளில் பெயர் மற்றும் முகவரியுடன் தேவையான விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பம் தயார் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சானறிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், சாதி சான்று நகல், விதவையாக இருந்தால் தாசில்தார் வழங்கிய சான்றின் நகல் ஆகியவற்றை இணைத்து வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை `மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், 2-ஏ, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய வணிக வளாகம், தியாகராயா ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.