இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதை அடுத்து நேற்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இடைநிலை ஆசிரியர்கள் குவிந்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்படுவதால், பதிவு மூப்பில் மாறுபாடு வந்துவிடாமல் இருப்பதற்காக அனைவருக்கும் ஒரே நாளில் சான்றிதழ் வழங்குவதற்காக விடுமுறை நாளில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும், சான்றிதழ்களை பெற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்காக, நேற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் சான்றிதழ்களை பதிவு செய்தனர். வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள் ஒவ்வொருவரின் சான்றிதழையும் சரிபார்த்து பெயர்களை பதிவு செய்தனர்.
முன்னதாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக பலர் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதலே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வரிசையில் காத்து நின்றனர்.
நேற்று காலையில் சென்னை, திருச்சி, ஈரோடு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் முன்பும் கூட்டம் அலைமோதியது. இதனால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்கள் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி வரிசையில் நிறுத்தினார்கள்.
சென்னை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 250 பேர் பதிவு செய்ததாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் டி.விஜயகுமார் தெரிவித்தார். மேலும், ஒரே நாளில் பலர் பதிவு செய்யும் போது பதிவு மூப்பு எப்படி வழங்கப்படும் என்று கேட்டதற்கு, வயது மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்குவோம் என்றார்.