இந்தியா - மலேசியாவில் உள்ள தங்கள் நாட்டு தொழிலார்களின் வேலைவாய்ப்பு நிலைமையை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) இரு நாடுகளும் இன்று கையெழுத்திட்டன.
இதற்கான ஒப்பந்தத்தில் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் மலேசிய நாட்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ எஸ். சுப்ரமணியம் ஆகியோர் புதுடெல்லியில் இன்று கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இரு நாடுகளும் ஒரு 'கூட்டு பணிக் குழுவை' நியமிக்கும். இந்த குழு இரு நாடுகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள், திறன் பற்றி ஆய்வு செய்யும்.
இந்த குழுவில் இருநாடுகளையும் சேர்ந்த குறைந்தபட்சம் தலா 3 உறுப்பினர்கள் இருப்பர். அவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை, ஒரு முறை இந்தியாவிலும் மற்றொரு முறை மலேசியாவிலும் சந்தித்து ஆலோசனை செய்வார்கள்.