அரசு துறைகளின் மூலம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 294 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், காலியிடங்களை நிரப்புவதற்கு தி.மு.க. அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது போலவும், மார்க்சிஸ்ட் கட்சியின் நாளேடான தீக்கதிர் இன்று செய்தி வெளியிட்டுள்ளதே?
2006 சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே, "அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணி நியமனதடை ஆணை விளைவாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவோம்'' என்றும், அ.தி.மு.க. ஆட்சியின் பணி நியமன தடை ஆணை காரணமாக பணியில் சேர வாய்ப்பின்றி வயது உச்சவரம்புக்கு ஆட்பட்டு, பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்துவோம் என்றும், வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அந்த இரண்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிடும் வகையில் தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், அரசாணைகளை வெளியிட்டது. காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை ஒரு காலக்கெடுவுக்குள் நிறைவேற்றிடவும், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசுப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகப்பட்ச வயது வரம்பை மேலும் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க ஏதுவாகவும், அரசாணைகள் வெளியிடப்பட்டன.
அரசாணைகளையொட்டி, 26.12.2006 வரை கழக அரசு வழங்கியுள்ள பணி நியமனங்கள் பற்றிய துறைவாரியான புள்ளி விவரங்கள் பின்வருமாறு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 1,213 பேர், வேளாண்மைத்துறை 2,028 பேர், கால்நடைப்பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை 2,019 பேர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை 853 பேர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை 953 பேர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை 445 பேர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 1,162 பேர், எரிசக்தித்துறை 20,860 பேர்;
நிதித்துறை 460 பேர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை 19,693 பேர், உயர் கல்வித்துறை 4,471 பேர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை 197 பேர், கைத்தறி, கைவினை மற்றும் துணிநூல் துறை 85 பேர், நெடுஞ்சாலைத்துறை 760 பேர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை 13,939 பேர், தொழில்துறை 92 பேர்;
தகவல் தொழில்நுட்பவியல் துறை 23 பேர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை 438 பேர், சட்டமன்ற பேரவை செயலகம் 5 பேர், சட்டத்துறை 129 பேர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 18,364 பேர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை 111 பேர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை 52 பேர், பொதுத்துறை 82 பேர்;
பொதுப்பணித்துறை 1,990 பேர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை 30,614 பேர், வருவாய்த்துறை 5,926 பேர், பள்ளி கல்வித்துறை 82,479 பேர், சிறுதொழில்துறை 108 பேர், சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை 28,800 பேர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை 135, தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை 385 பேர், போக்குவரத்துத்துறை 39,487 பேர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை 56 பேர்.
ஆக மொத்தம், இதுவரை தி.மு.க. அரசில், அரசு துறைகளின் மூலம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 294 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் ஏற்படுவதென்பது தொடர்ந்து நடைபெறுகிற ஒரு அம்சமாகும். அரசுப்பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறுதல், இயற்கை எய்துதல் போன்ற பல்வேறு காரணங்களினால் காலிபணியிடங்கள் ஏற்படுகின்றன. சராசரியாக ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறுகிறார்கள்.
காலி பணியிடங்களை நிரப்புவது ஒரே நாளில் செய்து முடிக்கின்ற காரியம் அல்ல. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கென்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர்கள் தேர்வு வாரியம், வேலைவாய்ப்பு அலுவலகம் என பல்வேறு வகையான அமைப்புகளின் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.