தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட 172 அரசுப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 26ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
துணை ஆட்சியர், போலீஸ் துணை கண்காணிப்பாளர் (தரம் 1), வணிக வரி அலுவலர், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சி மற்றும் நேர்முக உதவியாளர்-வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு கோட்ட அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான 172 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 16, 17ஆம் தேதிகளில் நடைபெற்றது. முதன்மைத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் (வாய்மொழித் தேர்வு) சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் 26, 29, 30, 31, ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
நேர்காணல் நடைபெறும் நாள், நேரம் குறித்த விவரம் ஒருவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அனைத்துச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.