தே.மு.தி.க. சார்பில் சென்னை அண்ணாநகர் மேற்கில் இம்மாதம் 14ஆம் தேதி வேலைவாய்பு முகாம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தே.மு.தி.க. சார்பில் இளைஞர்கள் மகளிர் உட்பட 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன். அதையொட்டி பல்வேறு இடங்களிலிருந்தும் வேலை வாய்ப்புக்கோரி மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பாக 22.11.2008 அன்று சேலத்திலும், 30.11.2008 அன்று ஈரோட்டிலும், 7.12.2008 அன்று கோவையிலும் வேலைவாய்ப்பு முகாம் முதற் கட்டமாக நடைபெற்றது.
இந்த முகாம்களில் சுமார் 20 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் சுமார் 8,000 பேர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டு விட்டது.
அடுத்த கட்டமாக சென்னையில் 14.12.2008 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் இந்த முகாமை தொடங்கி வைக்கிறேன். இந்த முகாம் காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை அண்ணாநகர் மேற்கு திருமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள லியோ மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும்.
இதில் சுமார் 350 தொழில் நிறுவனங்களிலிருந்து நேர்காணல் செய்து தேர்வு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட இளைஞர்கள், மகளிர் தங்கள் படிப்பிற்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் முழு தயாரிப்போடு இந்த நேர் காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் இந்த நேர் காணலில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், எந்த இடங்களில் வேலை கிடைத்தாலும் அங்கு போய் சேருவதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தகுதியைப் பொறுத்தே வேலைகள் கிடைக்கும் என்பதால் எந்த வகையான சிபாரிசுகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
சென்னையில் தலைமைக் கழகத்திற்கு முன்பே மனு அனுப்பியவர்கள் இந்த நேர்காணலின் கலந்து கொள்ளலாம். புதிதாக வேலை தேடி வருவோரும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.