சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடியால் பிரிட்டனில் வாழும்- பணியாற்றும் 1.5 இந்தியர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பணியாளர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து இந்தியப் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஹர்சேவ் பெய்ன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடியால் பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதாரச் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இதனால் அந்நாட்டு மக்களின் கோபம் பிரிட்டனில் வாழும் அயல்நாட்டவர்களின் மீது- குறிப்பாக இந்தியர்களின் மீது திரும்பும் சூழல் உள்ளது.
பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகள் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு, குறிப்பாக 1.5 மில்லியன் இந்தியர்களுக்கு கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அண்மையில் விடுத்துள்ள அறிவிப்பின்படி, எதிர்காலத்தில் இனப் பிரச்சனையும், புலம் பெயர்ந்துள்ளோருக்கு எதிரான உணர்வும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது தெரிய வருகிறது.
கடந்த 1930களில் கொள்கை வெறியுடன் அயல்நாட்டவர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் சிலர் நடத்திய போராட்டங்கள்தான், சுற்றிவந்து 1980களில் நடந்த நிறவெறிக் கலவரங்களுக்கு வழி வகுத்தது. அதுபோன்ற ஒரு சூழல் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது.
மேலும், ஐரோப்பிய எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு- குடியேற்ற விதிகள் மாற்றப்பட்ட பிறகு பிரிட்டனில் குடியேறும் அயல்நாட்டவர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இது சிக்கலை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 1938 இல் உருவாக்கப்பட்ட இந்தியப் பணியாளர்கள் கூட்டமைப்பானது பிரிட்டனின் மிகப் பழமையான அமைப்புகளில் ஒன்றாகும். இவ்வமைப்பு பல்வேறு இனப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.