Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏமன் நாட்டில் இந்திய ஊழியர்களின் அல்லல்!

ஏமன் நாட்டில் இந்திய ஊழியர்களின் அல்லல்!
, புதன், 26 நவம்பர் 2008 (14:17 IST)
தகவல் தொழில் நுட்ப புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வளைகுடா நாட்டுக்குச் செல்லும் மோகம் இந்தியா உள்ளிட்ட துணைக் கண்ட நாடுகளில் அதிகமிருந்தது. சாதரணக் கூலித் தொழிலாளிகள் முதல் உயர் கல்வி மேட்டுக்குடியினர் வரை துபாய், குவைத், சவுதி அரேபியா, மஸ்கட், ஏமன், ஷார்ஜா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் அங்கு நல்ல சம்பளம் பெற்று இந்தியாவில் அவர்களது குடும்பத்தினர், சுற்றத்தார்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினாலும் அவர்கள் அந்த நாடுகளின் படும் துயரங்களும், அல்லல்களும் இன்னமும் தொடர்ந்தபடியே உள்ளது.

ஒரு சில வளைகுடா நாட்டு நிறுவனங்கள் வேலை செய்தவர்களுக்கு கூலி கூட கொடுக்காமல், கொதித்தெழுந்தவர்களை காவல்துறையை வைத்து அடக்கு முறை செய்த போக்குகளையும் நாம் ஊடகங்கள் மூலம் அறிந்து வருகிறோம். அங்கு அலுவலகங்களுக்குள் பிரிட்டிஷாருக்கும், அமெரிக்கர்களுக்கும் இருக்கும் அதிகாரம், செல்வாக்கு, பணம் போன்றவை அங்கு பணியாற்றும் மற்ற நாட்டினருக்கு கிடையாது. அவர்கள் எந்த உயர்பதவியினராக இருந்தாலும். உதாரணமாக தலைமை பொறியாளர் என்ற பதவியில் ஒரு இந்தியருக்கோ, பாகிஸ்தானியருக்கோ கொடுக்கப்படும் சம்பளம் அதே பதவியில் நியமிக்கப்படும் பிரிட்டிஷாருக்கோ அல்லது அமெரிக்கருக்கோ கொடுக்கப்படும் சம்பளத்திற்கு உள்ள இடைவெளி சாதரணமானதல்ல.

தற்போது வேலை தெரியாத அராபியரகளும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாக துபாயில் 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டு தற்போதுஏமன் நாட்டில் பணியாற்றும் எமது வாசகர் ஒருவர் தெரிவிக்கிறார். அதாவது அராபியருக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்ற எல்லோரையும் விட மும்மடங்கு அதிகம் என்கிறார்.அவர்கள் நடந்து கொள்ளும் முறையும் அராஜகமாக உள்ளது என்று இவர் எங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

இவர் தகவல் தொழில் நுட்ப பணியான கணினி செயல்பாட்டு நிர்வாகி (சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்) பணியில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவருக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு சம்பளம் வந்தாலும், சம்பளத்தில் 60 விழுக்காடு வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது என்கிறார். மீதிப் பணம் மற்ற செலவுகளுக்கு சரியாக இருக்கிறது. சேமிப்பு என்பதே இல்லை என்று ஐ.டி. துறையில் பணியாற்றும் ஒருவரே கூறுகிறார் என்றால் அங்கு பணியாற்றும் மற்ற பணியாளர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

சில நூறுகளே வருவாயுள்ள தொழிலாளர்கள் எவ்வாறு சமாளிக்க முடியும் என்று அந்த வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு கேள்விப்படும் செய்திகளை வைத்து பார்க்கும்போது நிதி நெருக்கடியால் பல தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்வதாக அறிகிறேன் என்கிறார் அவர்.

இந்த அதிர்ச்சி தரும் தகவல் தவிர, நன்கு படித்த, தொழில் வல்லமை பெற்ற பல தொழில் முறை சார்ந்த பணியாளர்கள் வேலையின்றி நடுத்தெருவில் நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார். அல்லது வயிற்றுப்பிழைப்பிற்காக சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு வேலையை செய்து வருகின்றனர் என்ற அவல நிலையையும் அந்த வாசகர் சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக தற்போது அவர் பணியாற்றும் ஏமன் நாட்டில் பணியாற்றுவதற்கான எந்த ஒரு இயைபான சூழலும் இல்லை என்கிறார். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் மட்டுமே ஏமன் நாட்டில் பிழைக்க முடியும் என்கிறார்.

துபாயிலோ தினசரி பணிக்கு செல்வதே மிகப்பெரிய சிக்கலாக மாறிவருகிறது என்று கூறுகிறார் அவர். நாளுக்கு நாள் விலையேற்றம் நம்ப முடியாத அளவிற்கு செல்கிறது. இதனால் வெறுப்பின் எல்லைக்கு போகவேண்டியுள்ளது. பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் அவர்களிடமிருந்து அரசு வசூலிக்கும் தொகைகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் சேமிக்க வேண்டுமென்றால் ஒருவர் தனது பணியிடத்திலிருந்து வெகு தொலைவில் தங்கியிருக்க முடிவெடுக்க வேண்டும்.

அப்படி தொலை தூரத்தில் தக்க முடிவெடுக்கும் பட்சத்தில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் ஒருவர் பணிக்கு புறப்படவேண்டும் அப்போதுதான் 8 மணிக்கு அலுவலகம் செல்ல முடியும். சாலைகளில் கடும் வாகன நெரிசல், போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகவேண்டிய நிலை. இதனால் நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய மன அழுத்தம் நெருக்கடி. இதையெல்லாம் அனுபவிக்க ஒருவர் நீண்ட தொலைவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அலுவலகத்திலிருந்து உங்கள் வீடு 50கி.மீ தொலைவில் இருந்தாலே போதுமானது. இந்த தூரத்தைக் கடக்க துபாயில் ஆகும் நேரம் 3 மணி நேரம்!

மொத்தத்தில் பணிச்சூழலும் அமைதி அளிப்பதாக இல்லை. அலுவலகத்திற்கு வெளியேயும் வாழ்க்கை மிகவும் செலவு வைக்கும் ஒரு விவகாரமாக மாறியுள்ளது என்று அந்த வாசகர் கூறியுள்ளார்.

துபாயில் இவ்வளவு கஷ்டங்கள் என்று கூறும் அவர் ஏமனா? கடவுளே... அது ஒரு எமன்... இங்கு யார் வேலை பார்க்க முடியும் என்று வெறுப்பாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil