பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் வரும் 16ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் நளினி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கல்லூரிக் கல்வி இயக்கக வேலை வாய்ப்பு மையத்தின் சார்பில் சென்னையில் உள்ள நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் வரும் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் அரசு கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்ற ஆண் பட்டதாரிகள் பயனடையலாம்.
தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான விற்பனையாளர்கள் பணிக்கு சுமார் 500 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஆர்வமுள்ள ஆண் பட்டதாரிகள் தன்விவரப் பட்டியலுடன் (Resume) கலந்து கொண்டு இதில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
அண்மையில், கல்லூரிக் கல்வி இயக்கக வேலை வாய்ப்பு மையம் சார்பில் பல்லாவரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற ஏராளமானவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.