பாட்னா, ராஞ்சியில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ரயில்வேத் துறை தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா ரயில்வேத் தேர்வாணையம் மற்றும் ராஞ்சி ரயில்வேத் தேர்வாணையம் மூலம் ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக வரும் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவிருந்த போட்டித் தேர்வுகள் மறுஅறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்து தேர்வெழுத அழைப்புக் கடிதம் பெற்றவர்கள் தேர்வு மையத்துக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, ரயில்வேத் துறையின் இணையத்தளமான http://www.rrcb.gov.in என்ற முகவரியிலும் மற்றும் மண்டல ரயில்வேத் தேர்வாணைய இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
அண்மையில் மராட்டியத்தில் நடந்த ரயில்வேத் துறை தேர்வின் போது தேர்வு மையத்துக்குள் அத்து மீறி நுழைந்த மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தொண்டர்கள் தேர்வெழுத வந்த வடநாட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் பலியானார். இதையடுத்து கலவரத்தை தூண்டி விட்டதாக மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயை கைது செய்யக்கோரி பீகாரில் தொடர்ந்து வன்முறை, கலவரங்கள் நிகழ்ந்து வருவதால் இத்தேர்வுகள் மறு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்ட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.