ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பபட உள்ள கணினி, வேளாண்மை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் தெரிவிக்கையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடத்துக்கு கடந்த 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சிறப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 1,686 பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இவர்களுக்கு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் வரும் 24ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 200 வேளாண்மை ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்காக பி.எஸ்சி. வேளாண்மை அல்லது தோட்டக்கலை படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களில் 373 பேருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருபவர்கள், தங்களது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், தகுதிச் சான்றிதழ்கள், சாதிச் சான்று மற்றும் 2 புகைப்படங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கண்ணன் கூறினார்.