பழங்குடியின (எஸ்.டி.) மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்க வழங்கப்பட்டு வரும் நிதியுதவி திட்டங்களை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் சர்வே சத்யநாராயணா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய பழங்குடியினர் நல விவகாரத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் ஓரான் இதனைத் தெரிவித்தார்.
மாற்றியமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டு, நக்சல் பாதிக்கப்பட்ட வடகிழக்குமாநிலங்களில் பழங்குடியின மாணவ-மாணவியர் விடுகளைக் கட்டுவதற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். மற்ற மாநிலங்களில் மாணவர் விடுதிக்கு மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து 50:50 என்ற விகிதத்தில் விடுதிகள் கட்டப்படும் என்றார்.
தவிர யூனியன் பிரதேசங்களில் கட்டப்படும் மாணவ-மாணவிகளுக்கான விடுதி கட்டுமான செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.
மற்ற தங்கும் விடுதிகளுக்கு வழங்குவதைப் போலவே தொழில் பயிற்சி மையங்களில் (VTCs) படிக்கும் பழங்குடியின மாணவ-மாணவிகளின் தங்கும் விடுதிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படும்.
இந்த திட்டத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் மாநில அரசின் பங்காக இதற்கான தொகையை அளிக்கலாம்.
தங்கும் விடுதிகள் பராமரிப்பு செலவு அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களையே சாரும். இந்த விடுதிகள் முதல்நிலை, நடுநிலை, உயர்நிலை, கல்லூரி, பல்கலை அளவிலான படிப்புக்கானதாக இருக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் 2007-08ஆம் ஆண்டில் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.37 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நிதிநிலை அறிக்கையில் இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.66 கோடியில் இதுநாள் வரை ரூ.22.21 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.