தீயணைப்பாளர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கான உடற்கூறு அளத்தல், உடற்திறனறித் தேர்வு அடுத்த (நவம்பர்) மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் 2007ஆம் ஆண்டிற்கான 339 தீயணைப்பாளர்கள் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடந்தது.
இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் www.tn.gov.in/tnursb என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு பெற்றவர்களின் உடற்கூறு அளத்தல், உடற்திறனறித் தேர்வு நவம்பர் 25ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை,சேலம், திருச்சி, வேலூர், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.