விஜயதசமி நாளான இன்று 'அட்சரப்பியாசம்' என்ற நிகழ்ச்சி மூலம் மழலைக் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணி, வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
நவராத்திரி விழாவின் இறுதிக் கட்டமாக கல்விக்கு உகந்த விஜயதசமி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்புகள் தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மழலைக் குழந்தைகளுக்கு 'வித்யாரம்பம்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக முதல்முதலாக எழுத்தறிவிக்கும் பணியும் நடைபெற்றது. பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து 'ஹரி ஓம்' என்று பெற்றோர்கள் எழுதச் செய்தனர். இதை 'அட்சரப்பியாசம்' என்றும் கூறுவர்.
இதேபோல் விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் செழிப்பாக வளரும் என்று கருதப்படுவதால், தொழில், வணிக நிறுவனங்கள் தங்களின் புதிய கணக்குகளையும், தொழில்களையும், சிறப்புப் பூஜைகள் நடத்தி இன்று தொடங்கி உள்ளன.