தமிழிசைப் பல்கலைக்கழகம் தொடங்க அரசு முன் வர வேண்டும். தமிழிசையை அனைத்து வகுப்புகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் 'பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம்' சார்பில் தண்டபாணி தேசிகரின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதி இராஜேஸ்வரன் விழாவை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது: தமிழிசையை தண்டபாணி தேசிகர் பாடுபட்டு வளர்த்தார். ஓதுவார்கள் தான் இசையை மீட்டனர். தமிழிசையை இளைஞர்களுக்கு கற்றுத் தர வேண்டும். அதற்காக ஒரு இயக்கம் அமைக்க வேண்டும்.
தமிழிசையை கற்பதால் ஒழுக்கமும், மனிதநேயமும் வளரும். மனதில் வன்முறை அடியோடு ஒழியும். எனவே தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழிசைக் கல்வியை கட்டாயப் பாடமாக்க வேண்டும். தமிழிசையில் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
தமிழிசையை பாடுவதற்கு அரங்கங்கள் தருவதில்லை. தமிழிசையை பாடுவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 5 அரங்கங்களை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் 17 இசைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, அவற்றுக்குச் சொந்தக் கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
மும்பை, டெல்லி, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழிசை விழாவை அறிமுகம் செய்துள்ளோம். அமெரிக்காவிலும் நடத்த இருக்கிறோம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
இவ்விழாவில் இதழாளர் ஜே.வி. கண்ணன் அறிமுக உரையாற்றினார். கோ.க. மணி, அ.கி. மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.