Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் கல்வித்தரம் உயர்வு: ஆளுநர் பெருமிதம்!

தமிழகத்தில் கல்வித்தரம் உயர்வு: ஆளுநர் பெருமிதம்!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (12:14 IST)
தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்திருப்பதாகவும், பொறியியல் கல்வியில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாகவும் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத் தொடக்க விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, வேல்ஸ் பல்கலைக்கழகத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் சர்வதேச தரத்திற்கு ஒப்பாக கல்வி அளிக்கப்படுகிறது. உயர் கல்வியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும், சீனாவும் உள்ளன.

இந்தியா பொறியியல், மருத்துவக் கல்வியில் சர்வதேச தரத்துடன் விளங்குகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கல்வியின் தரம் உயர்ந்து, தலைசிறந்து விளங்குகிறது.

நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 247 பல்கலைக்கழகங்கள், 98 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. 12.7 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானில் 726 பல்கலைக்கழகங்களும், 27.6 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 2,466 பல்கலைக்கழகங்களும், 8.2 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனில் 350 பல்கலைக்கழகங்களும் உள்ளன.

எனவே நம் நாட்டில் தற்போதுள்ள பல்கலைக்கழகங்கள் போதாது. மேலும் பல பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் உருவாக வேண்டும்.

மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்குபவர்களாகவும் உருவாக வேண்டும். மாணவர்களின் திறமை, அறிவு ஆகியன நம் நாட்டுக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் பர்னாலா பேசினார்.

இவ்விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், துணைவேந்தர் என்.ஆனந்த், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.மீர் முஸ்தபா ஹூசேன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil