நடப்பாண்டில் புதியதாக 25,000 பேரை பணியில் அமர்த்தவிருப்பதாக, நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் அறிவித்துள்ளது.
மேலும் சீனா, கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் தனது திறனை மேலும் அதிகரிக்க இன்போசிஸ் திட்டமிட்டிருப்பதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி சேனாதிபதி கோபாலகிருஷ்ணன் சிங்கப்பூரில் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் சீனாவில் புதியதாக 1,000 பேர் பணி அமர்த்தப்படுவார்கள் என்ற அவர், ஐரோப்பிய நாடுகளில் சந்தையை வலுப்படுத்துவதற்காக அங்குள்ள ஆலோசனை மையங்கள் விரிவாக்கப்படும் என்றார்.
அண்மையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட மந்தகதியால், வேலைவாய்ப்பு குறைந்து விடுமோ என்ற அச்சம் நிலவிய சூழ்நிலையில், இன்போசிஸின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.