Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புத்தகத்துடன் தேர்வு: குஜராத் அரசு!

புத்தகத்துடன் தேர்வு: குஜராத் அரசு!
பாடப் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் புதிய திட்டத்தை குஜராத் மாநில அரசு நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் உள்ள பாஜக அரசு, பள்ளிக் கல்வித்துறையில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தேர்வு எழுதும் முறையில் சில சீர்திருத்தங்களை அது செய்துள்ளது.

புதிய முறையின்படி மாணவர்கள் தேர்வு எழுதும்போது, பாடப்புத்தங்களை பார்த்து விடை எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதுமையான திட்டம், நடப்புக் கல்வியாண்டில் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் அறிமுகம் செய்யப்படுகிறது.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், கல்வித்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, மாநில கல்வித்துறை அமைச்சர் ராமன்லால் வோரா அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெற்றோர்கள் எதிர்ப்பு : அரசு மேற்கொண்டுள்ள புதிய முறைக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் போட்டித் தேர்வுக்கு மாணவர்களால் தயாராக முடியாது என்பது அவர்களின் வாதம்.

ஆனால், இக்கூற்றை குஜராத் அரசு நிராகரித்துள்ளது. பாடப் புத்தகங்களைப் பார்த்து எழுதுவதால் மட்டும் 100 மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியாது என்று அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

அதிர்ச்சியளித்த சோதனை முடிவு: இதை உறுதி செய்வது போல், பாரஜா அருகே உள்ள பள்ளி ஒன்றில் புதிய முறைப்படி 8 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. தேர்வு எழுதிய 37 பேரில் 16 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

குஜராத் அரசு சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ள புதிய தேர்வு முறை எத்தகைய பலனை அளிக்கிறது என்பது போகப்போகத் தான் தெரியும்.

Share this Story:

Follow Webdunia tamil