அமெரிக்க அதிபராக யார் பொறுப்பேற்றாலும், இந்தியாவில் அந்நாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் அவுட்- சோர்சிங் பணிகள் தொடரும் என்று, அமெரிக்க தூதரக அதிகாரி பிரெடெரிக் ஜே. கப்லான் தெரிவித்துள்ளார்.
இந்திய- அமெரிக்க பொருளாதார உறவுகள் தொடர்பான கருத்தரங்கு திருச்சிராப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் (பொது விவகாரங்கள், சென்னை) பிரெடெரிக் ஜே. கப்லான், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு தொடர்வதற்குக் காரணம் பிரதமர் மன்மோகன்சிங்- அதிபர் ஜார்ஜ் புஷ் இருவரும் தான். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தற்போது 83,000 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதேபோல், கடந்த ஆண்டில் அமெரிக்காவுக்கு செல்வதற்கு 7 லட்சத்து 25 ஆயிரம் குடியுரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்பட்டன. இது இவ்வாண்டு அதிகரிக்கக்கூடும். இரும்பு, சுகாதாரம், மென்பொருள் துறையில் இந்திய நிறுவங்கள் முதலீடு செய்துள்ளன.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா அல்லது ஜான் மெக்கெயின் என யார் வந்தாலும், இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் அவுட்சோர்சிங் பணிகள் தொடரும்.
இவ்வாறு பிரெடெரிக் ஜே. கப்லான் கூறினார்.