ஓமன் நாட்டில் உள்ள ஒரு கட்டடம் கட்டும் நிறுவனத்துக்கு தகுதி, அனுபவம் உள்ள பொறியாளர்கள், எலக்ட்ரீஷியன்கள் கொத்தனார்கள், கார்ப்பென்டர்கள் தேவைப்படுவதாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓமன் நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு டைல்ஸ், மார்பிள், செங்கல் வேலை, பிளாஸ்டரிங் போன்ற ஏதேனும் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற கொத்தனார்கள், 10 ஆண்டு அனுபவமுள்ள சென்ட்ரிங் கார்பென்டர்கள், கம்பி வளைப்பவர்கள் ஆகியோர் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.
மேலும், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற 5 ஆண்டு அனுபவமுள்ள எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், 8 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற சிவில் பொறியாளர்கள் (பி.இ), புராஜக்ட் பொறியாளர்கள், எச்.வி.ஏ.சி. பிரிவில் அனுபவம் பெற்ற புராஜக்ட் பொறியாளர்கள், டி.யூ.சி.டி. பேப்ரிகேட்டர்களும் தேவைப்படுகின்றனர்.
இப்பணிகளுக்கான நேர்முகத் தேர்வு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக வரும் 21ஆம் தேதி திருநெல்வேலியில் பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்திலும், 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பட்டணம், தாஜ் திருமண மகாலிலும், 24ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மெக்டொனால்டு சாலையில் உள்ள பிரீஸ் ரெசிடென்சி ஓட்டலிலும் (ஜென்னி ஓட்டல்), 25ஆம் தேதி சென்னை அம்பத்தூர் பாடியில் உள்ள எம்.டி.எச். சாலையில் உள்ள வெங்கடசேஷ மகாலிலும் நடைபெற இருக்கிறது.
தகுதி, அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஆகியவற்றின் 2 நகல்களுடன் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து தங்களுக்கு அருகிலுள்ள ஏதேனும் நேர்முகத் தேர்வு மையத்துக்கு செல்லலாம்.
இது பற்றிய மேலும் விவரங்கள் அறிய 044-24464268, 24464269 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.