சுற்றுலாத் துறை என்பதை கேள்விப் பட்டிருக்கிறோம்! அதென்ன மருத்துவ சுற்றுலாத் துறை என்று நீங்கள் வியப்பது புரிகிறது.
இந்தியாவில் தற்போது பெருகி வருவதும், பலருக்கும் வருவாய் உள்ளிட்ட பல்வேறு பயன்களைத் தரக்கூடியக் கூடியதுமான 'மருத்துவச் சுற்றுலாவைப் பற்றி இனி கொஞ்சம் பார்ப்போம்.
தகவல் தொழில் நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியா, மருத்துவத் துறையிலும் தனது முத்திரையை பதிக்கத் தவறவில்லை.
இந்திய மருத்துவர்களின் அபார செயல்திறன், உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முறைகள், குறைந்த செலவில் தரமான மருத்துவம் எளிதாகக் கிடைக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றால் உலகத்தை தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது நம் நாடு.
உதாரணத்திற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் 20 ஆயிரம் டாலர் செலவாகிறது. தாய்லாந்தில் இது 14,500 டாலராக உள்ளது. ஆனால் இந்தியாவில் இதய சிகிச்சைக்கு 6,000 அமெரிக்க டாலர் மட்டுமே செலவாகிறது.
இதனால் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர், குறிப்பாக ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள், ஆசியக் கண்ட நாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இத்தகைய மருத்துவக் காரணங்களுக்காக பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையே 'மருத்துவச் சுற்றுலா' என்று நாம் வரையறுத்துள்ளோம்.
இவர்களின் வருகை, இந்திய மருத்துவத்துறையின் வருவாயை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், அதை சார்ந்த துணை தயாரிப்புகள் ஆகியனவற்றின் விற்பனையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வருவாயை இது நேரடியாகவும், மறைமுகமாகவும் பெருமளவிற்கு பெருகியுள்ளது.
சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர், பல்வேறு முக்கிய நகரங்களில் தங்குவதால் அந்த நகரங்களில் உள்ள விடுதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது.
சிகிச்சைக்கு வருபவர்கள் நாட்டின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மற்ற இடங்களை பார்ப்பதற்கும், இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும், அது தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கும் இலாபம் அதிகரித்து வருகிறது.
சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவத்துறை காப்பீடு செய்ய வேண்டிய தேவை இருப்பதால், காப்பீட்டு துறையில் இருப்பவர்கள் காட்டிலும் அடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மருத்துவச் சுற்றுலாத் துறையின் மூலம் இந்தியாவின் அன்னியச் செலவாணியும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. வரும் 2012ஆம் ஆண்டில், இது ரூ.8 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவை வளமாக்கச் செய்யும் துறைகளில் ஒன்றாகக் கருதப்படும் மருத்துவம் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான பாடங்கள், நாட்டிலில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவவை சில வருமாறு:
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் & டிராவல் மேனேஜ்மென்ட், புதுடெல்லி
* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை
* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
* பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி- 605 014
* ஸ்ரீ ராமசந்திரா மருத்துவக்கல்லூரி, சென்னை
* டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, கோவை- 35
* திருப்பூர் குமரன் கலை அறிவியல் கல்லூரி, திருப்பூர்.