ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்த பாரத அரசு வங்கி (எஸ்பிஐ) எழுத்தர் பணிக்கான தேர்வில், தேர்வுக்கு பணம் கட்டிய ரசீதை கொண்டு வராததால் தேர்வு எழுத மறுக்கப்பட்டவர்கள் ஜூலை 13ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாரத அரசு வங்கிகளில் காலியாக உள்ள 20,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதனபடி, ஜூலை 6, 13 தேதிகளில் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
6ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை காலையில் தேர்வுக்கு வந்தவர்களிடம் தேர்வுக்கு பணம் செலுத்திய ரசீதையும் தேர்வு அலுவலர்கள் கேட்டனர்.
ஆனால், தேர்வு எழுத வந்திருந்த சிலர் ஹால் டிக்கெட்டை மட்டுமே எடுத்து வந்திருந்தனர். இதனால் பணம் கட்டிய ரசீது இல்லாதவர்கள் தேர்வு எழுத முடியாது என அதிகாரிகள் கூறிவிட்டனர்.
தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுடன் பணம் கட்டிய ரசீதையும் கொண்டுவர வேண்டும் என விதி இருப்பதும் அதை முறைப்படி தேர்வர்களுக்கு தெரிவித்திருப்பதையும் தேர்வு அலுவலர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து விதியை அறிந்தும் ரசீது கொண்டு வராதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்வு நடந்த இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டவர்கள் பயனைடயம் வகையில், அடுத்த வாரம் தேர்வு அவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.