மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சேராவிட்டால் முன் தொகை ரூ.2,500 திருப்பித் தரப்பட மாட்டாது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மருத்துவத்தில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு வரும் ஜூலை 11-ம் தேதி தொடங்குகிறது. இதனால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ள சில மாணவர்கள், மருத்துவத்திற்கான கலந்தாய்வில் இடத்தை உறுதி செய்து கொண்டு கல்லூரியில் சேராமல் இருக்கும் நிலையைக் கடைப்பிடிக்கின்றனர்.
எனினும் மருத்துவத்திற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களிடம் ரூ.2,500-க்கு வரைவோலை (கல்விக் கட்டணத்தில் பாதி ரூ.2,000 மற்றும் கலந்தாய்வு கட்டணம் ரூ.500) வாங்கிக் கொண்டு, கல்லூரியில் சேருவதற்கான ஆணை வழங்கப்படுகிறது. கல்லூரி சேர்க்கை ஆணையைப் பெற்றுவிட்டு, குறிப்பிட்ட கல்லூரியில் சேராமல் இருந்தால், ரூ.2,500 திருப்பித் தரப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஆணையைப் பெற்றுவிட்டு, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேராமல் இருந்தால் காலியிடங்கள் ஏற்படும். இந்தக் காலியிடங்களை 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தித்தான் நிரப்ப முடியும்.
ஆனால் முதலிலேய மாணவர்கள் பி.இ. படிப்பில் சேருவது என முடிவு செய்துவிட்டால் மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல் இருந்துவிடலாம். அதனால் அவர்களது தரவரிசை, பட்டியலில் அடுத்தபடியாக உள்ள மாணவர்களுக்கு தன்னிச்சையாக அளிக்கப்படும். இதனால் உண்மையிலேயே மருத்துவம் படித்து மருத்துவ சேவை செய்ய ஆசைப்படும் மாணவர்களுக்கு சிறந்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.