Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐக்கிய அரபு நாடுகள் பயண விசா கட்டணங்க‌ள் அதிகரிப்பு!

ஐக்கிய அரபு நாடுகள் பயண விசா கட்டணங்க‌ள் அதிகரிப்பு!
, திங்கள், 9 ஜூன் 2008 (13:10 IST)
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று தங்குவதற்கான பயண விசா கட்டணங்கள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விசா விதிமுறைகளின்படி, ஐக்கிய அரபு நாடுகளுக்கு வரும் அனைவரும் பயண விசா கட்டணம் செலுத்துவது மட்டுமின்றி, உடல் நல காப்பீட்டையும் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுபவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவரை அல்லது குடும்பத்தினரை அழைத்தால், அவர்கள் ஒரு மாதம் தங்க 500 திராம் கட்டி பயண விசா பெற வேண்டும். இது நீட்டிக்கக் கூடியது அல்ல. ஒரு மாதத்திற்கு மேல் 90 நாட்கள் வரை தங்குவதற்கு 1,000 திராம்கள் கட்டி விசா பெற வேண்டும் என்று இத்தகவலை வெளியிட்ட ஐ.அ.நா. குடியேற்றத் துறைத் தலைமை இயக்குனர் மொஹம்மது சலீம் அல் கய்லி கூறியுள்ளார்.

விசா கட்டணம் மட்டுமின்றி, பாதுகாப்பு வைப்புத் தொகையாக 1,000 திராம்கள் கட்ட வேண்டும். இது பயணம் முடிந்து வெளியேறும் போது திருப்பி அளிக்கப்படும்.

இவ்விரு விசாக்கள் மட்டுமின்றி, ஐ.அ. நாடுகளுக்கு அடிக்கடி சென்று வர அனுமதிக்கும் தனி விசாவை 2,000 திராம்கள் கட்டி பெறலாம் என்றும் சலீம் அல் கய்லி கூறினார்.

ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்றுபவர்கள் தங்களின் குடும்பத்தினர் வந்து தங்க ஒரு மாத‌ம் அல்லது 90 நாள் விசாவைப் பெறலாம். குடும்பத்தினர் அல்லாத மற்ற உறவினர்கள் தங்க அந்நாட்டு அதிகாரி ஒருவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

நண்பர்களை அழைக்க வேண்டும் எனில் அந்நாட்டு குடிமகன் ஒருவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கல்வித் தொடர்பாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு வர விரும்பும் மாணவர்கள் 60 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும் விசாவை 1,000 திராம்கள் கட்டிப் பெற வேண்டும். இப்படி 16 விதமான விசா வகைகளுக்கு ஐ.அ. நாடுகள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் சுற்றுலா பயண விசாவில் எந்த மாற்றமும் இல்லை. 100 திராம்களை கட்டி (முகவர்கள் வாயிலாக) பெற்றுக்கொள்ளலாம்.

இந்த விசா கட்டண உயர்வு துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு பணியாற்றச் செல்லும் சாதாரண பணியாளர்களுக்கு பெரும் சுமையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil