கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் லலிதா ஜான் தகவல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் கால்நடை வளர்ச்சிக்கென்று தனி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மூலம் உலகத்தரம் வாய்ந்த கால்நடை மருத்துவ பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது.
கால்நடை மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் மட்டுமின்றி கோழி வளர்ப்பு மற்றும் பால்பண்ணை சார்ந்த தொழிற்சாலைகள், கால்நடைகளுக்கான உணவு பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகள், மருந்து நிறுவனங்கள், அரசு வங்கிகள், ராணுவ கால்நடை மருத்துவ பிரிவு, தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
பந்தய குதிரைகள் பராமரிக்கும் நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழில்துறை போன்றவற்றிலும் கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்பும் படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் லலிதா கூறியுள்ளார்.