Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்லூரி நிகழ்ச்சிக்கு நடிகர்களை அழைக்ககூடாது : துணைவேந்தர் உத்தரவு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

கல்லூரி நிகழ்ச்சிக்கு நடிகர்களை அழைக்ககூடாது : துணைவேந்தர் உத்தரவு
, திங்கள், 3 மார்ச் 2008 (16:13 IST)
கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நடிகர், நடிகைகளை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க‌க் கூடாது. அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தக்கூடாது என பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் உத்திரவிட்டுள்ளார்.

ஈரோடு சி.கே.எஸ்., அறக்கட்டளை, திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம், நவரசம் கல்வி நிறுவனங்கள் சார்பில், முப்பெரும் விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று நடந்தது.

நவரசம் கல்வி நிறுவன தாளாளர் குமாரசாமி எழுதிய "காலடிச்சுவடுகள்' நூல் வெளியீடு, நாடகக் கலைஞர்களுக்கு பரிசளிப்பு, மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் என முப்பெரும் விழா நடந்தது.

விழாவில் பாரதியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் திருவாசகம், கவிதைநூலை வெளியிட, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., பாரி பெற்றுக் கொண்டார்.

துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:

இன்று கல்லூரி மேடைகளில் தமிழ் மொழி சாகிறது. புறக்கணிக்கப்படுகிறது. பல்கலைகழகங்களில் உறுப்பினராக அங்கம் வகிப்பவர்கள் சில புத்தகங்களை எழுதியிருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அதிக சம்பளத்தை பெற்றுக் கொண்டு, வகுப்பறைக்கு சென்று பாடம் நடத்தாமல், வாசித்துவிட்டு வருகின்றனர்.

தங்கள் கல்லூரியில் 100 சதவீதம் தேர்ச்சி இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர். 100 சதவீதம் தாய் மொழிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

மொழி பங்கீடு குறைந்து விட்டது. முன்பெல்லாம் மேடைகளில், பட்டிமன்றத்தில் நல்ல தலைப்புகள் கொடுக்கப்பட்டது. பேச்சின் நீதியை முக்கியமாக கருதினர். ஆனால், அதைப் பற்றி கவலையின்றி இன்று பட்டிமன்றங்களில் பணம் வாங்கிக் கொண்டு பேசும் பேராசிரியர்கள், நடிகர்களை பற்றி பேசுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் இருக்கும் போது, தமிழ் மொழி எப்படி வளரும்? வாழும்? இன்றைய மேடை நிகழ்ச்சிகளை பாரதியும், பாரதிதாசனும் பார்த்தால், "என் பிள்ளைகள் ஆடிய, பாடிய, கவியரங்கம் நடத்திய மேடையில் இன்று கலாச்சார சீரழிவான குத்தாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது' என கண்ணீர் விடுவர்.

இன்று பிள்ளைகளுக்கு எதை சொல்லித் தருகிறீர்கள்? ஆங்கிலத்தை கற்றுத் தருகிறீர்கள். அதை நிறுத்தும்போது தான் பாரதி மகிழ்வான். காலம் மாறும் போது, அத்தனையும் மாறிவிடுமோ என்று பயமாக உள்ளது! சீனாக்காரன் இங்கு வந்து தமிழ் படிக்கிறான். தமிழன் தமிழ் படிக்க தயங்குகிறான். நடப்பு 2008 09ம் கல்வி ஆண்டில் இருந்து பகுதி 1 தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எந்த நாட்டு மாணவராக இருந்தாலும் தமிழை கற்றாக வேண்டும். வெளிநாட்டு மாணவர்களுக்கு அடிப்படை தமிழும், தமிழக மாணவர்களுக்கு இலக்கியத் தமிழும் வழங்கப்படுகிறது.

அதேபோல், பகுதி4ல் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளை வைத்து கல்லூரி நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதை மீறிய இரு கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.

பாரதியார் பல்கலையில் "எம்.ஏ., சிவில் ஒர்க்ஸ்' என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் எந்த பல்கலைக்கழகத்திலும் இந்த பாடம் இல்லை. இது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கனவில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil