வேலூர் கோட்டையில் பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு ஆள் எடுக்கிறார்கள். இதில் சென்னை உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.ஜெயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர் (தொழில்நுட்பம்) பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்வதற்கான தேர்வு வேலூர் கோட்டையில் 18, 19ஆம் தேதியில் நடைபெற உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும், புதுச்சேரியைச் சேர்ந்தோரும் கலந்துகொள்ளலாம்.
பிளஸ் 2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் படித்திருக்க வேண்டும். வயது 17 1/2 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். உயரம் 16 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 77 செ.மீ. விரிவடையும்போது 82 செ.மீ. இருக்க வேண்டியது அவசியம்.
தேர்வுக்கு வரும்போது, 10ஆம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்று, நன்னடத்தை சான்று, இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, முன்னாள் ராணுவ வீரர் மகன் எனில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனரிடமிருந்து சான்று, பணியில் உள்ள ராணுவ வீரரின் மகனாக இருந்தால் ராணுவ யூனிட்டில் இருந்து சான்று, என்.சி.சி. மற்றும் விளையாட்டு சான்று (இருந்தால்) ஆகியவற்றின் அசல் மற்றும் சான்றொப்பம் பெறப்பட்ட ஒவ்வொரு சான்றிதழின் 2 நகல்கள் மற்றும் 10 கலர் போட்டோக்களை கொண்டுவர வேண்டும்.
உடற்தகுதி தேர்வுக்கு பொருத்தமான உடைகளுடன் ஆள்சேர்ப்பு தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் அதிகாலை 5 மணிக்குள் வந்துவிட வேண்டும். சென்னை உள்பட மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஆட்சித் தலைவர் ஜெயா கூறியுள்ளார்.