அமெரிக்காவில் நடக்கும் இன்டெல் அறிவியல் திறனாளிகள் ஆய்வு (எஸ்.டி.எஸ்.) போட்டியில் பங்கேற்க ஏழு இந்திய-அமெரிக்க மாணவர்கள் உட்பட 40 பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 67 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆறு நோபல் பரிசு உடபட நூற்றுக்கும் மேற்பட்ட உலகின் தலைசிறந்த விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சிறப்புமிக்க அறிவியல் போட்டியாக கருதப்படும் எஸ்.டி.எஸ். 'இளைய நோபல் பரிசு' என்றும் அழைக்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டிற்கான இறுதி போட்டியக்கு 19 மாகாணங்களை சேர்ந்த 35 பள்ளிகளில் இருந்து 40 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் 15 மாணவர்களும், பென்சில்வேனியாவில் நான்கு மாணவர்களும், டெக்சாஸில் மூன்று மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தபோட்டிக்கு அவந்தி ராகவன் (புளோரிடா), ஷ்ரவானி மிக்கிலிநேனி (மிச்சிகன்), ஹம்சா ஸ்ரீதர் (நியூயார்க்), அசோக் சந்திரன் (நியூயார்க்), ஷிவானி சுத் (வடக்கு கலிபோர்னியா), இஷா ஜெயின் (பென்சில்வேனியா), வினய் வெங்கடேஷ் ரமாசேஷ் (டெக்சாஸ்) ஆகிய இந்திய-அமெரிக்க மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இறுதிபோட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்கள் மார்ச் மாதம் வாஷிங்டனில் இருந்து ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் மார்பக புற்றுநோய், பொருளாதாரம், சுத்தமான நீர் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதில் வெற்றிபெறும் மாணவருக்கு ஒரு லட்சம் டாலர் உதவித்தொகை கிடைக்கும். இதனை இன்டெல் அறக்கட்டளை வழங்குகிறது. இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் 5 ஆயிரம் டாலர் மற்றும் லேப்டாப் வழங்கப்பட உள்ளது.