இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.)போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. www.successrunway.com என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளம் "ஆன்-லைன்' முறையில் தேர்வு எழுதவும் வாய்ப்பு அளிக்கிறது.
இந்த இணையதளத்தை "பேஸ்' என்ற பயிற்சி நிறுவனமும் "எக்செல்சாஃப்ட்' என்ற இணையதள கல்வி நிறுவனமும் இணைந்து துவக்கியுள்ளன. இது குறித்து அவற்றின் அதிகாரிகளான வள்ளிஷ் என். ஹெரூர், சாதன்வா ஆகியோர் கூறியதாவது:
www.successrunway.com என்ற இந்த இணையதளம், நேரடியாகக் கல்வி கற்கும் சூழலை மாணவர்களுக்கு உருவாக்கித் தருகிறது. இணையதளத்தால் ஆன்-லைனில் நடத்தப்படும் தேர்வுகளில், அகண்ட அலைவரிசை (பிராட்பாண்ட்) இணையதள இணைப்பு கொண்ட இன்டர்நெட் மையங்கள், வீடு அல்லது எந்த இடத்திலிருந்தும் பங்கேற்கலாம். ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்களை அது தொடர்பான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது, அவர்களது திறமையை மதிப்பிடுவது, கர்நாடக தொழில் கல்வி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை இந்த இணையதளம் வழங்கும்.
பிப்ரவரி முதல் தேதியிலிருந்து இச் சேவைகளை இந்த இணையதளம் வழங்கும். மாணவர்கள் ஐந்து மாதிரிப் போட்டித் தேர்வுகளை இந்த இணையதளம் மூலம் எழுத வாய்ப்பு அளிக்கப்படும். அதன் மூலம் பல்வேறு விதமான தேர்வு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு வினாவையும் விரிவாக ஆய்வு செய்து, காட்சிகளுடன் விளக்கம் அளிக்கப்படுவதால், நேரடியாக ஆசிரியரிடம் கற்றுக்கொண்டதைப் போன்ற பயன் மாணவர்களுக்குக் கிடைக்கும். அதோடு கணித வினாக்களுக்கு விடை காண்பதற்கான மாற்று முறைகளும், சுருக்குவழிகளும் கற்றுத்தரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.