மத்திய அரசின் பொதுப்பணித் துறையில் முதுநிலை பொறியாளர் பணியில் சேர மத்திய பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வை நடத்த உள்ளது. இதற்கு ஜனவரி 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குனர் எஸ்.சுபத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் பொதுப்பணி துறையில் முதுநிலை பொறியாளர்களை (சிவில் மற்றும் மெக்கானிக்கல்) நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட உள்ளது. சிவில் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்களும் பி.இ. மற்றும் ஏ.எம்.ஐ.இ. பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது 26-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு. தேர்வுக்கட்டணம் ரூ.100. இதனை சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் ஸ்டாம்பாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் தேர்வுக்கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
தென்மண்டல பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.ææநீæக்ஷீ.ரீஷீஸ்.வீஸீ) தேர்வு பற்றிய முழு விவரமும், மாதிரி விண்ணப்ப படிவமும் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த விண்ணப்ப படிவ மாதிரியை கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து விண்ணப்பமாக பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை `தென்மண்டல இயக்குனர், பணியாளர் தேர்வாணையம், 2-வது மாடி, ஈ.வி.கே.சம்பத் பில்டிங், கல்லூரிச்சாலை, சென்னை 600 007' என்ற முகவரிக்கு ஜனவரி 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.