தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் மூடப்பட்டுள்ள 18 ஓட்டுனர் பயிற்சி பள்ளியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நேரு கூறினார்.
அமைச்சர் நேரு சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுடன் பேருந்து வழித்தட ஒப்பந்தம் நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இந்த ஒப்பந்தம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி கேரளாவில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பேருந்துகளை இயக்கலாம். வரும் புதன்கிழமை கேரளா அமைச்சர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
ஆந்திராவில் 48 ஆயிரம் கிலோ மீட்டரும், கர்நாடகாவில் 51 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமும் நமது மாநில பேருந்துகளை இயக்கலாம். ஒப்பந்தப்படி கர்நாடக அரசு தமிழகத்தில் 280 பேருந்துகளையும், கர்நாடகாவில் தமிழக அரசு 315 பேருந்துகளையும் இயக்க முடியும். கர்நாடகா அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுவிட்டது.
நமது அரசு விரைவில் அரசாணை வெளியிடும். கருணாநிதி ஆட்சியில் தான் அண்டை மாநிலங்களுடன் பேருந்து போக்குவரத்து ஒப்பந்தம் முழுமை பெற்றுள்ளது. ஒப்பந்தப்படி, அந்தந்த மாநிலங்களில் மட்டும் வரி கட்டினால் போதும். அதனால் சேலம் கோட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி மிச்சம் ஏற்படும். விழாக் காலங்களில் இரு மாநில அரசுகளும் தன்னிச்சையாக பேருந்துகளை இயக்கலாம்.
நான்கு மாநிலங்களுக்கும் இடையே 600 பேருந்துகளை ஒப்பந்தப்படி கூடுதலாக இயக்கலாம். 180 புதிய வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும்போது ரூ. ஆயிரம் கூடுதல் வசூல் கிடைக்கும். வருமானம் உயரும்; தனியார் பேருந்துகள் வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
ஐந்தாம் முறையாக கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின் போக்குவரத்துத் துறையில் ரூ.450 கோடி கூடுதல் வசூல் வந்துள்ளது. கடந்த ஆட்சியில் தமிழகத்தில் இருந்த 18 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும் மூடப்பட்டன. அவை விரைவில் திறக்கப்பட உள்ளன என்று அமைச்சர் நேரு கூறினார்.