பிரிட்டனில் புதிதாக உருவாகும் வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காட்டை அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றி விடுகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் வேலைவாய்ப்பு தொடர்பாக ஐரோப்பிய தொழிலாளர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
1997 முதல் 2006 வரை 8,62,000 வேலைகளில் வெளிநாட்டவர்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர். இது புதிதாக உருவான மொத்த வேலைவாய்ப்பில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். அதே காலத்தில் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 7,31,000 வேலைகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
எனவே, தங்கள் நாட்டுக் குடிமக்களுக்கு அதிகம் வேலை வழங்கும் ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் பிரிட்டன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
மொத்தமுள்ள 12 நாடுகளில் 11ஆவது இடத்தில் உள்ள செக் குடியரசிற்கு அடுத்தபடியாக 12ஆவது இடத்தில் பிரிட்டன் உள்ளது. ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களுக்குள் உள்ளன.
குடியமர்த்தல் கொள்கைகள், வேலை அனுமதி தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றில் பிரிட்டன் கடைபிடிக்கும் மென்மையான அணுகுமுறையே இதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.