கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் (எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.) சேர்வதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் செப்டம்பர் 2 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வில் தகுதி பெறுவதன் மூலம், மத்திய அரசின் வேறு சில கல்வி உதவித் தொகைகளுக்கும் விண்ணப்பித்து பெற முடியும். அதே நேரம், ஒரு சில பொறியியல் கல்வி நிறுவனங்கள் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு 'கேட்' தகுதித் தேர்வை கட்டாயமாக்கியுள்ளன.இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்) மற்றும் ஏழு ஐஐடி நிறுவனங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு இந்த ஆண்டு கோரக்பூர் ஐஐடி-யிடம் கொடுக்கப்பட்டுள்ளது.'
கேட் 2014' தேர்வில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் இடம்பெறும் 21 தாள்களும், ஆன்லைன் மூலமே எழுத வேண்டும். மேலும் சில கேள்விகளுக்கான விடைகளை (எண்கள்) 'வெர்ச்சுவல்' கீபேட் மூலம் பதிலளிக்கும் வகையிலும், மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்கள் கொள்குறிதேர்வு முறையிலும் வடிவமைக்கப்பட உள்ளன.
தேர்வுகள் 2014 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில், ஒரு வாரம் விட்டு ஒருவாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மதியம் என இரண்டு வேளைகளிலும் நடத்தப்பட உள்ளன.
தேர்வு தேதிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. தேர்வுக்கான பிற நடைமுறைகள் 2013 ஆம் ஆண்டு 'கேட்' தேர்வில் இடம்பெற்ற வழிகாட்டுதல்களே பின்பற்றப்பட உள்ளன. தேர்வறை நுழைவுச் சீட்டை அந்தந்த மண்டல "கேட்" அலுவலக இணைய தளத்திலிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
'கேட் 2014' தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் செப்டம்பர் 2 ஆம் தேதி திறக்கப்படும். விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி அக்டோபர் 3 ஆகும். இவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அந்தந்த மண்டல 'கேட்' அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 10 ஆகும்.