தொடக்கக் கல்வித் துறைக்கு தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 1,895 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பல்வேறு துறையின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், சராசரியாக 40 வயது வரையுள்ளவர்களாக இருக்கின்றனர். இதனால் இவர்கள் ஆசிரியர் பயிற்சியை முடித்து பல ஆண்டுகள் ஆகியிருப்பதால், இவர்களுக்கு கற்பித்தல் குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மதுரை, வேலூர், திருவண்ணாமலை, சீர்காழி, சேலம், சங்ககிரி, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் 6 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரு பிரிவுகளாக நடைபெறும் இப்பயிற்சியில் முதல் கட்டமாக, பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 7-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.