திட்டமிடல், தயார் நிலை மற்றும் தேர்வு எழுதும் முறை ஆகிய மூன்றையும் சரியாக பின்பற்றி செயல்படுத்துவதன் மூலம் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா கூறினார்.
தருமபுரியை அடுத்த நல்லானூரில் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிகரத்தை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பேசிய தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா, பிளஸ் 2 தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே படித்த பாடங்களைப் படிப்பது, படிக்காத பாடங்களைப் படிப்பது என்ற நிலைகள் உள்ளன. எனவே மாணவர்கள் இந்த 30 நாளைக்கும் ஓர் அட்டவணை அமைத்து அதன்படி படிப்பதற்குத் தயாராக வேண்டும்.
இரண்டாவதாக தேர்வுக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் எந்தப் பாடங்கள் நன்றாக உங்களுக்கு மனதில் பதியுமோ அவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும். படித்து மனதில் இறுத்திக் கொள்ள முடியாத பாடங்களை படிப்பதில் செலவிடும் நேரத்தை கைவிட்டு, எந்த பாடப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளதோ அதில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக, தேர்வு எப்படி எழுதுவது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இதற்கு தேர்வில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்பதை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதற்கான பதிலை தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வினாவை ஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டு அதற்கு தெளிவான பதில் அளிப்பதே முழுமையான மதிப்பெண் பெறுவதற்கான வழி. அத்துடன் தேவையான பகுதிகளில் படங்கள், உதாரணங்களை எழுதுதல், முக்கியமான பகுதிகளில் அடிக்கோடு இடுதல் வேண்டும் என்றார் ஆட்சியர் அமுதா.