செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலும் கலந்தாய்வு அட்டவணையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 21 அரசு நர்சிங் பள்ளிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,795 இடங்கள் உள்ளன.
மாணவர் சேர்க்கை குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறுகையில், மொத்தம் 5,780 பேர் செவிலியர் படிப்புக்கு விண்ணப்பித்தனர். தரவரிசைப் பட்டியல், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், www.tnhealth.org என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தேர்வுக் குழு அலுவலகத்தில் நடக்கிறது.
கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள் விரைவில் அனுப்பப்படும். கடிதம் கிடைக்கப் பெறாத, தகுதியுள்ளவர்கள் தங்களுக்கு உரிய தேதிகளில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறினார்.