12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தற்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதம்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
அவ்வாறு அதிக மதிப்பெண் எடுத்து கல்லூரியில் படித்து வரும் மாணாக்கர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் மத்திய அரசு, கலை கல்லூரி மற்றும் தொழில்கல்வி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது. இந்த திட்டத்தின்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2008-09) இளங்கலை பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும். தொடர்ந்து அவர்கள் பட்ட மேற்படிப்பு (முதுநிலை) படிக்கும்போது மாதம் ரூ.2 ஆயிரம் பெறலாம்.
இதேபோல், மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிக்கும் இளங்கலை மாணவர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.ஆயிரமும், 4-வது மற்றும் 5-வது ஆண்டுகளில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். இந்த உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டில் 10 மாதங்களுக்கு கிடைக்கும்.
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மொத்தம் 4,883 மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் மதிப்பெண் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆதி திராவிடர், பழங்குடியினர், ஓ.பி.சி. வகுப்பினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு உண்டு. ஒவ்வொரு வகுப்பிலும் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை டபிள்யுடபிள்யுடபிள்யு.டிஎன்.ஜிஓவி.இன்/டிஜிஇ என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாகவோ, பதிவு அஞ்சல் அல்லது விரைவு தபால் மூலமாகவோ இணை இயக்குனர் (மேல்நிலை), அரசு தேர்வுகள் இயக்ககம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச்சாலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும் தபால் உறையின்மேல், கல்லூரி மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 28-ந் தேதி ஆகும்.