சென்னை லயோலா கல்லூரியில் வரும் கல்வியாண்டில் எம்.எஸ்சி. நானோ தொழில்நுடப் படிப்பு தொடங்கத் திட் டமிடப்பட்டுள்ளது என்று அக்கல்லூரி முதல்வர் ஏ.ஆல்பர்ட் முத்துமாலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "வரும் கல்வியாண்டு முதல் எம்.எஸ்சி. நானோ தொழில்நுட்ப படிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது சென்னை பல்கலைக்கழக குழு வந்து பார்வையிட்டு சென்றவுடன், படிப்பு தொடங்கப்படும்" என்றார்.
பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் கல்லூரியில் உள்ள 13 அறிவியல் துறைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.65 லட்சம் வழங்கப்பட உள்ளதாக கூறிய அவர், 2-வது கட்டமாக ரூ.72 லட்சம் வழங்கப்படும் என்றார்.
கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம், ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது என்றும் ஜனவரி 6ஆம் தேதி வரை கருத்தரங்கம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 250 அயல்நாட்டினர் பங்கேற்கின்றனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி, கருத்தரங்கத்தைத் தொடங்கி வைக்கிறார். கணினி அறிவியலில் கணிதத்தின் பங்கு, கணிதவியல் துறையில் ஆய்வுகளை தொடங்குவது போன்றவை இதில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.