சென்னை பல்கலை.யின் பட்டமளிப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது.
விழாவுக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். இதில் 55,000 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். மேலும், 400 பேர் பி.எச்டி. ஆராய்ச்சிக்கான பட்டமும் பெறுகிறார்கள்.
இவ்விழாவில் உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ராஜேஷ்வர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் சந்திராயன் திட்ட இயக்குனரான தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்பட 2 பேருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது என்று பல்கலைக் கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.