அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 7,000 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் செல்லும் என்றும் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 7,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆட்களை தேர்வு செய்தது.
இதை எதிர்த்து இடைநிலை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், எங்களுக்கு பதவி உயர்வு அளித்துவிட்டு அதன்பிறகு காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அதுவரை புதிய நியமனம் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி ஜோதிமணி பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை விதித்தார்.
இந்த தடையை நீக்கக் கோரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கமும், அரசு தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இன்று தீர்ப்பு கூறினார்.
ஆசிரியர் நியமனத்துக்கு விதித்திருந்த தடையை ரத்து செய்வதாகவும், இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.