மாணவர்களுக்கிடையே நடந்த மோதலுக்குப் பிறகு காலவரையன்றி விடுமுறை விடப்பட்ட சென்னை சட்டக்கல்லூரி ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே கடந்த மாதம் நடந்த மோதலையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டதோடு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி விடுதியும் மூடப்பட்டது.மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து தற்போது அமைதி திரும்பியுள்ளதால் கல்லூரியை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர் துரைமுருகன், சட்டக்கல்லூரி விடுதிக்கும் சென்று இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டக் கல்லூரியை ஜனவரி 19ஆம் திறக்க அரசு முடிவு செய்துள்ளது" என்றார்.
மேலும், ரூ.70 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து விடுதியை புதுப்பித்து வருகிறோம், கல்லூரி திறப்பதற்கு முன்பே விடுதியை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆதி திராவிட மாணவர்களே விடுதியில் அதிகம் தங்குவதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு எல்லா வசதியும் கிடைத்தால் அனைத்து தரப்பு மாணவர்களும் விடுதியில் தங்க முடியும் என்பதால் விடுதியில் வசதிகள் செய்து தரப்படும் என்றார்.
விடுதியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விளையாட்டு மைதானம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர், ஜாதி அடிப்படையில் மாணவர்கள் மோதிக்கொள்வதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
ஜாதி மோதல் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.