விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்றோருக்கு உதவி தொகையுடன் கூடிய 6 மாத இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற, காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற நபர்களுக்கு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் 6 மாத கால இலவச கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.300 வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2 தேர்வு பெற்றிருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 விழுக்காட்டிற்கு மேல் இருக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய ஊனமுற்ற மாணவ, மாணவிகள் வருகிற 24ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலரிடம் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய சான்றுகள் மற்றும் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.