வீடியோ கான்பரன்சிங் முறையில் வழங்கப்பட்ட தொழில்முறை வழிகாட்டும் நிகழ்ச்சியினால் நகரத்தில் உள்ள மாணவ, மாணவியர் மற்றும் ஊரக மாணவர்கள் சுமார் 1,500 பேர் 30 மாவட்டங்களில் பயனடைந்துள்ளனர் என வேலைவாய்ப்புத் துறை ஆணையர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசு பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதலை ஆன்லைன் மூலமாகவும் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்ததன் அடிப்படையில் ஆன்லைன் வாயிலாக உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி 11.06.2008 முதல் 13.06.2008 வரை தேசிய தகவல் மையம், ராஜாஜி பவன், பெசன்ட்நகர், சென்னை-90இல் நடைபெற்றது.
இதனையடுத்து வீடியோ கான்பரன்சிங் முறையில் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல்கள் குறித்த நிகழ்ச்சி தேசிய தகவல் மையம், ராஜாஜி பவன், சென்னை அலுவலகத்துடன் இணைந்து முதற்கட்டமாக சென்னை மண்டலத்தைச் சார்ந்த சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் நலத் துறை அமைச்சரால் 30.09.2008 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு முதன்மைச் செயலரால் 22.10.2008 அன்று கோவை மண்டலத்தைச் சார்ந்த கோவை, ஈரோடு, உதகமண்டலம், நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
மூன்றாவது கட்டமாக 16ஆம் தேதி திருச்சி மண்டலத்தைச் சார்ந்த திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலுர், திருவாருர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இறுதிக் கட்டமாக 18ஆம் தேதி மதுரை மண்டலத்தைச் சார்ந்த மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில், இந்நிகழ்ச்சி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைஅரசு முதன்மைச் செயலரால் தொடங்கி வைக்கப்பட்டு முடிவுற்றது.
இதுவரை இந்த வீடியோ கான்பரன்சிங் முறையில் வழங்கப்பட்ட தொழில்முறை வழிகாட்டும் நிகழ்ச்சியினால் நகரத்தில் உள்ள மாணவ, மாணவியர் மற்றும் ஊரக மாணவர்கள் சுமார் 1,500 பேர் 30 மாவட்டங்களில் பயனடைந்துள்ளனர் என வேலைவாய்ப்புத் துறை ஆணையர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் தெரிவித்தார்.
போட்டித் தேர்வுகள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவ மாணவியர் படிப்பதற்காக எல்லா வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றம் 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையர் தெரிவித்தார்" என்று கூறப்பட்டுள்ளது.