மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினம் நவம்பர் 11ஆம் தேதி ஆகும்.
இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட மவுலானா ஆசாத்துக்கு புகழ் மாலை சூட்டும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நவம்பர் 11ஆம் தேதி நாடு முழுவதும் 'தேசிய கல்வி தினம்'-ஆக (National Education Day) கடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் கல்வியின் முக்கியத்துவைத்தை உணர்த்தும் வகையில் பேரணி, கருத்தரங்கு போன்றவைகளை ஏற்பாடு செய்து இதில் பங்கேற்கின்றன.
இதற்கான துவக்க விழா புதுடெல்லி விக்யான் பவனில் நவம்பர் 11ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் முன்னிலை வகிக்கிறார்.
இவ்விழாவில் இந்தியாவின் நவீன கல்வியின் சிற்பி மவுலானா ஆசாத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு உறை குடியரசுத் தலைவரால் வெளியிடப்படுகிறது. மேலும் இந்திய தேசிய புத்தக டிரஸ்ட் சார்பில் மவுலானா ஆசாத் பற்றிய 2 புத்தகங்களும் வெளியிடப்படுகிறது.
மேலும் தேசிய புத்தக டிரஸ்ட், மவுலானா ஆசாத்தின் புகைப்படக் கண்காட்சிக்கும் விக்யா பவனில் ஏற்பாடு செய்கிறது.
இவ்விழாவில் மத்திய, மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மத்திய கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்கின்றனர். இதே போன்ற விழா தமிழ்நாடு, ஆந்திரா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்படுகிறது.