தமிழக அரசின் நிதியுதவியுடன், சிறுபான்மையினத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள கணினி பயிற்சியில் சேர அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின இளைஞர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தமிழக அரசின் நிதி உதவியுடன் கணினி பயற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் 'ஹார்டுவேர் அண்டு நெட் வொர்க்கிங்', 'சி', 'சி-பிளஸ் பிளஸ்', 'டி.டி.பி'., 'டேலி மற்றும் எம்.எஸ்.ஆபிஸ்' ஆகிய திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த பயிற்சி சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பத்தூர், குன்னூர், மேட்டுப்பாளையம் உள்பட பல ஊர்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி நிலையங்கள் மூலம் அளிக்கப்பட உள்ளது.
இதில் சேர்வதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவ, மாணவிகள் முஸ்லிம், கிறிஸ் தவர், சீக்கியர், புத்தமதம், பார்சீயர்கள் உள்ளிட்ட சிறு பான்மையின வகுப்பை சார்ந்தவர்களாக இருப்பதுடன் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி உரிய சான்றுகளுடன் பயிற்சி பெற விரும்பும் மாவட்டம் மற்றும் பயிற்சியின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பத்தினை "மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807- 5வது தளம், அண்ணாசாலை, சென்னை -2" என்ற முகவரிக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.