சென்னை: அஞ்சல் வாரத்தை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
3 முதல் 5-வது வகுப்பு வரையிலான (சப்-ஜூனியர்) மாணவர்களுக்கு, சமீபத்தில் சென்று வந்த இடம் பற்றி நண்பனுக்கு கடிதம், பள்ளியில் உனக்கு பிடித்த ஆசிரியரைப் பற்றி நண்பனுக்கு கடிதம் ஆகிய 2 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
6முதல் 8-வது வகுப்பு வரையிலான (ஜூனியர்) மாணவர்களுக்கு, சமீபத்தில் படித்த புத்தகம், மறக்க முடியாத அனுபவம்/கற்ற பாடம், தபால் அலுவலகத்துக்கு சென்று வந்ததது பற்றி நண்பனுக்கு கடிதம் ஆகிய 3 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
9 முதல் 12-வது வகுப்பு வரையிலான (சீனியர்) மாணவர்களுக்கு, இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் சேவைகள் குறித்து வெளிநாட்டில் இருக்கும் நண்பனுக்கு கடிதம், உலகம் வெப்பமாதல் மற்றும் அதை தடுப்பதில் மாணவரின் பங்கு, ஜாதியற்ற சமுதாயம் உருவாக்குதல் ஆகிய 3 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் 044-28291531, 28295079, 28292781 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
அஞ்சல் அலுவலகத்தில் வாங்கும் 'இன்லேண்ட்' கடிதத்தில் மட்டுமே எழுத வேண்டும். மாணவர்களின் சொந்த கையெழுத்தில் இருக்க வேண்டும். ஒருவரே பல கடிதங்கள் எழுதலாம். ஆனால் தனித்தனி 'இன்லேண்ட்' கடிதத்தில் எழுத வேண்டும். வகுப்பு மற்றும் பள்ளி முகவரியை பின்கோடு இலக்கத்துடன் குறிப்பிட வேண்டும். வீட்டு முகவரியை குறிப்பிட வேண்டாம்.
கடிதங்களை 'இயக்குனர், மெயில் பிசினஸ், முதல் தளம், கிரீம்ஸ் ரோடு, பி.ஓ.காம்ப்ளக்ஸ், சென்னை-600 006' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த போட்டிக்கான கடிதங்களை அனுப்புவதற்கான கடைசி தேசி அக்டோபர் 20 என அறிவிக்கப்பட்டிருந்தது. பலரது வேண்டுகோளை ஏற்றும் மேலும், பல மாணவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் நோக்கிலும் கடைசி நாள் நவம்பர் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.