தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை தமிழகத்தில் 2007-08ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் உதவித் தொகை பெற்றவர்கள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் புதியதாக விண்ணப்பங்களை சமர்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008-09ஆம் ஆண்டில் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வேண்டி முதல்முறையாக விண்ணப்பிப்போர் தங்களது விண்ணப்பங்களை அமைந்த படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இக்கால வரையறை இன்று (15.10.08) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தங்களது முழு பாதுகாப்பில் வைத்துக்கொண்டு மாணவ, மாணவிகளின் ஒருங்கிணைந்த பட்டியலை உரிய படிவத்தில் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வேண்டி முதல்முறையாக விண்ணப் பிக்கும் மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு அல்லது தொழில் பட்டப்படிப்புகளில் இறுதித்தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் தான் சிறுபான்மையினத்தை சார்ந்தவர் என்பதற்கான சாதி பற்றிய விவரம் ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் எழுதி பெற்றோர் அல்லது பாதுகாவலரால் உறுதிமொழி சுய கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றி தழில் சான்றுறுதி அலுவலர் கையொப்பம் பெற வேண்டியதில்லை. மற்றும் வருவாய் அலுவலரின் சான்றும் இணைக்க வேண்டியதில்லை.
பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் குறித்த உறுதிமொழி ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் சுய கையொப்பமிட்டு அளித்தால் போதுமானது" என்று கூறப்பட்டுள்ளது.