வேலைவாய்ப்பற்றோர் அரசின் நிவாரண உதவித் தொகை பெற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ்செல்வி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பற்றோர் நிவாரணம் பெற 2006 மற்றும் 2007இல் விண்ணப்பம் அளித்தவர்கள் தொடர்ந்து நிவாரணம் பெற சுயஉறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மற்றும் பட்டம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.9.08ஆம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் (30.9.2003 வரை பதிவு செய்துள்ளவர்கள்) வேலை வாய்ப்பற்றோர் நிவாரணம் பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து புதுப்படிவம் பெற்று பூர்த்தி செய்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் நேரில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், ஏனைய விண்ணப்பதாரர்கள் 40 வயது முடிவடையாமலும் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்து விண்ணப்பம் அளிப்பவர்கள் இம்மாவட்டத்திற்கு உட்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் புதியதாக சேமிப்புக் கணக்கு தொடங்கி அப்புத்தகத்தின் அசல், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் அசல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.