பொறியில் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 30ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
இது குறித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக சேர்க்கை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2008ஆம் ஆண்டுக்கான சிறப்பு கலந்தாய்வு, ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும்.
அனைத்து பொது கல்வி, தொழிற்கல்வி பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தொழிற்கல்வி பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முன்பே விண்ணப்பித்து கலந்தாய்வுக்கு அழைக்கப்படாதவர்களும் கலந்து கொள்ளலாம்.
விண்ணப்ப தொகை, பொது பிரிவினருக்கு ரூ.500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு ரூ.250ம் செலுத்த வேண்டும். (தமிழ்நாடு எஸ்சி., எஸ்டி பிரிவினர் சாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்). கலந்தாய்வுக்கான முன்தொகை பொது பிரிவினருக்கு ரூ.5000, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு ரூ.1000 செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனைத்து சான்றிதழ்கள், அவற்றின் நகல்களையும் கொண்டு வரவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் வரும் 30ஆம் தேதி வழங்கப்பட்டு அன்றே கலந்தாய்வும் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்துக்கு வரவேண்டும். மீதமுள்ள இடங்களின் விவரம் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும்" என்று கூறப்பட்டு உள்ளது.