பொறியியல் கல்லூரி மாணவரின் மனுவை ஏற்று ஒரு வாரத்திற்குள் அவருக்கு கல்விக் கடன் வழங்கும்படி, திருவாங்கூர் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடைச் சேர்ந்த மாணவர் பிரேம்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் இயந்திரவியல் பட்டயப்படிப்பு முடிந்து, 2007- 08 ஆம் கல்வியாண்டில் கல்லூரி ஒன்றில் 2-ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் (B.E.) சேர்ந்தேன். பிறகு ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூரில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். எனது தந்தை அவ்வங்கியின் கிளையில் 20 ஆண்டுகளாக கணக்கைப் பராமரித்து வருகிறார்.
எனினும், தகுந்த காரணங்களை தெரிவிக்காமல் எனது கடன் விண்ணப்பத்தை வங்கி மேலாளர் நிராகரித்தார். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளை பலமுறை அணுகிக் கேட்டபோது, உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் தலைமை அலுவலகத்தில், வங்கி மேலாளர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இது, சென்னை மண்டல அலுவலகத்தில் உள்ள துணைப் பொது மேலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு எனது புகார் மனு மீது விசாரணை நடத்தப்படாமல் முடிக்கப்பட்டது.
எனவே, இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு 2008- 09 மற்றும் 2009- 10 ஆம் கல்வியாண்டுக்கு எனக்கு கல்விக் கடனை அளிக்கும்படி வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், வங்கி அதிகாரிகள் மீதான மனுதாரர் திரும்பப் பெற்றுக் கொண்டால், அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் அவருக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட வங்கிக்கு உத்தரவிட்டார்.